விலங்கியல்
புலி
- விவரங்கள்
- படிப்புகள்: 967

புலி
உயிரியல் வகைப்பாடு
திணை:(இராச்சியம்) Animalia
தொகுதி: Chordata
வகுப்பு : Mammalia
வரிசை: Carnivora
குடும்பம்: Felidae
பேரினம்: Panthera
இனம்: P. tigris
இருசொற்பெயர்: Panthera tigris
புலி (பாந்தெரா டைகிரிஸ் ),ஃபெலிடே இன வகையைச் சேர்ந்ததாகும். பாந்தெரா இனத்தின் நான்கு "பெரிய பூனையினங்களில்" இதுவே மிகப் பெரியதாகும். இதன் பூர்வீகம் பெரும்பாலும், கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா ஆகும். புலி உயர்நிலை ஊனுண்ணியும், ஆதிக்கமிக்க ஊனுண்ணியும் ஆகும். 4 metres (13 ft) வரை நீளமும் 300 கிலோகிராம் (660 பவுண்டுகள்) வரை எடையும் கொண்டுள்ள பெரிய புலி உள்ளினங்களை கூரிய நகங்கள் கொண்டு வேட்டையாடும் தகவமைப்பு கொண்ட அழிந்துவிட்ட பாலூட்டிகளின் அளவோடு ஒப்பிடலாம். கொழுத்த உடலும் திறனும் மட்டுமின்றி அவற்றின் உடலில் உள்ள வெள்ளையிலிருந்து ஆரஞ்சு வரையிலுள்ள நிறத்திலும், அதற்குப் பக்கத்தில் கருப்பு நிறத்திலும் உள்ள பட்டைப் பட்டையான வரிகளும் வெளிர் நிற அடிப்பகுதியுமே அவற்றின் நினைவுகூறத்தக்க முக்கிய சிறப்பம்சங்களாகும். புலி இனத்தின் மிகப் பெரிய உள்ளினம், சைபீரியன் புலி என்பதாகும்.
பரந்த தகவமைப்பு கொண்ட இனமான புலிகள், சைபீரியாவின் டைகா(குளிரும் மரங்களும் நிறைந்த பகுதிகள்) முதல் திறந்த புல்வெளிகள் வரை, நிலநடுக்கோட்டுப் பகுதியின் மாங்குரோவ் சதுப்பு நிலங்கள் வரையிலும் பரவி உள்ளன. இவை பிரதேசம் சார்ந்தவை, பொதுவாக இவை தனிமையாக வாழ்பவை ஆகும். இவற்றுக்கு வேட்டையாடும் தேவைக்கு ஏற்ப தொடர்ச்சியான பரந்த வாழிடப்பரப்பு தேவைப்படுகிறது. இந்தக் காரணத்தினால் தான் பூமியின் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளில் இவை வாழும்போது அப்பகுதிகளில் மனிதர்களுடன் பல குறிப்பிடத்தக்க சிக்கல்கள் உண்டாயின. நவீன புலிகளின் ஒன்பது உள்ளினங்களில் மூன்று அழிந்துவிட்டன. மீதமுள்ள ஆறு உள்ளினங்கள் ஆபத்தானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சில மிக ஆபத்தானவை. முதன்மையான நேரடிக் காரணங்கள், சொந்த வாழிடங்கள் அழிக்கப்படுதல் மற்றும் வாழிடத்தைப் பகுதிகளாகப் பிரித்தல் மற்றும் வேட்டையாடுதல், வரலாற்றுப்படி முதலில் மெசபடோமியா மற்றும் கவுகசஸில் இருந்து தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா வரை இருந்த இவற்றின் எல்லையானது தற்போது குறிப்பிடுமளவுக்குக் குறைந்துள்ளது. வாழும் அனைத்து இனங்களும் சாதாரணமான பாதுகாப்பின் கீழ் இருக்கும் நிலையில் சட்டத்திற்குப் புறம்பான வேட்டை, சொந்த வாழிடங்கள் அழிக்கப்படுதல் மற்றும் அக-இனப்பெருக்கத்தாலான பாதிப்பு ஆகியவை தொடர்ந்த அச்சுறுத்தல்களாக உள்ளன.
எனினும் புலியே உலகின் கண்ணைக் கவரும் பெரிய விலங்குகளில் மிகப் பிரபலமானதாகவும் அறியப்பட்டதாகவும் உள்ளது. அவை பழம் புராணங்களிலும் நாட்டுப்புற இலக்கியங்களிலும் முக்கிய இடம்பெற்றுள்ளன. தற்காலத் திரைப்படங்கள் மற்றும் இலக்கியங்களிலும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. புலிகளின் உருவமானது பல கொடிகளிலும் கோட் சின்னங்களிலும் இடம்பெறுகிறது. விளையாட்டு அணிகளுக்கு சின்னங்களாகவும் பல ஆசிய நாடுகளின் தேசிய விலங்காகவும் உள்ளது.
பெயரிடுதலும் சொற்பிறப்பு
"டைகர்" என்ற சொல் "டைகிரிஸ் " என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பெறப்பட்டுள்ளது. இந்த கிரேக்கச் சொல்லானது பாரசீக மொழியில் அந்த விலங்கின் வேகத்தைக் குறிப்பிடும் வகையில் "அம்பு" எனப் பொருள்படும் சொல்லில் இருந்து பிறந்திருக்கலாம். மேலும் டைகிரிஸ் என்ற நதியின் பெயரிலிருந்தும் பிறந்திருக்கலாம். அமெரிக்க ஆங்கிலத்தில் "டைக்ரெஸ்" என்ற சொல் முதலில் 1611 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. லின்னேயஸின் இயற்கையின் அமைப்பு என்ற அவரது 18 ஆம் நூற்றாண்டுக் கொள்கையில் விவரிக்கப்படும் பெரும்பாலான இனங்களில் ஃபெலிஸ் டைகிரிஸ் எனப்படும் இதுவும் ஒன்றாகும். அதன் பேரினத்தின் அறிவியல் பெயரான பாந்தெரா டைக்ரீஸ், என்ற சொல் பான்- ("அனைத்திலும்") மற்றும் தெரான் ("சிறந்தது") என்ற கிரேக்கச் சொற்களிலிருந்து உருவாகியிருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் இது ஒரு வாய்வழிச் சொல் வரலாறாக இருக்கலாம். பாந்தெரா என்ற சொல்லானது செம்மொழிகளின் வழியாகவே ஆங்கிலத்திற்கு வந்திருந்தாலும் பெரும்பாலும் அது கிழக்கு ஆசியாவில் தோன்றியதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதன்படி இச்சொல்லுக்கு "மஞ்சள் நிற விலங்கு" அல்லது "வெளிர் மஞ்சள்" எனப் பொருள்.
புலிகளைக் குழுவாகக் காண்பது அரிது, ஆனால் அவ்வாறு காணப்படும்போது அவை 'ஸ்ட்ரீக்' அல்லது 'அம்புஷ்' என அழைக்கப்படுகின்றன.
பரவல் எல்லை
வரலாற்றின் முந்தைய காலத்தில் பெருமளவில் ஆசியாவில் கவுகசஸ் மற்றும் காஸ்பியன் கடல் முதல் சைபீரியா மற்றும் இந்தோனேசியா வரை புலிகள் பரவியிருந்தன. 19 ஆம் நூற்றாண்டின் போது பட்டைக்கோடிட்ட பூனைகள் மேற்கு ஆசியாவிலிருந்து முற்றிலுமாக அழிந்தன. பின்னர் அவற்றின் வாழ் எல்லையின் எஞ்சியப் பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட வரம்பில் மட்டுமே பகுதிகளாகத் தனிப்படுத்தப்பட்டன. தற்போது இவ்வாறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட வாழிட எல்லை வரம்பானது மேற்கில் இந்தியாவிலிருந்து கிழக்கில் சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா வரை பரவியுள்ளது. வடக்கு எல்லையானது தென்கிழக்கு சைபீரியாவில் அமுர் நதியுடன் முடிகிறது. தற்காலத்தில் புலிகள் வாழும் பெரிய தீவு சுமத்ரா மட்டுமே. ஜாவா மற்றும் பாலி தீவுகளில் இருந்த புலிகள் 20ஆம் நூற்றாண்டில் அழிந்துவிட்டன. மேலும் போர்னியோவில் எஞ்சியுள்ள புதைபடிவங்களில் மட்டுமே அறியப்படுகின்றன.
இயற்பியல் குணங்கள், வகைப்பாடு மற்றும் பரிணாமம்:
பழமையான பாந்தெரா பாலயோஸினென்ஸிஸ் எனப்படும் புலி போன்ற பூனை இனத்தில் மிஞ்சியவை. இவை சீனாவிலும் ஜாவாவிலும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இனமானது 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ப்ளெஸ்டோஸீன் யுகத்தின் (இருபது இலட்சமாவது ஆண்டு முதல் தற்காலத்திலிருந்து 11,000 ஆண்டுகள் முன்பு வரையிலான காலம்) தொடக்கத்தில் வாழ்ந்தன. மேலும் இவை தற்காலத்திலுள்ள புலியை விடச் சிறியவையாக இருந்தன. மிகப் பழமையான புலிகளின் புதைபடிவங்கள் ஜாவாவிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. அவை 1.6 முதல் 1.8 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை. மத்திய ப்ளெஸ்டோஸீன் யுகத்தின் முற்பகுதிக் காலத்தைச் சேர்ந்த பழமையான புதைபொருட்களிலிருந்து வேறுபட்ட புதைபடிவங்கள் சீனா மற்றும் சுமத்ரா பகுதிகளின் படிவுகளிலிருந்து கிடைத்துள்ளன. ட்ரினில் டைகர் (பாந்தெரா டைகிரிஸ் ட்ரினிலென்ஸிஸ் ) என்றழைக்கப்படும் உள்ளினமானது 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தது. மேலும் இவற்றின் புதைபடிவங்கள் ஜாவாவின் ட்ரினில் என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புலிகள் முதலில் இந்தியா மற்றும் ப்ளெஸ்டோஸீன் யுகத்தின் பிற்பகுதியில் கிழக்கு பெரிஞ்சியா (அமெரிக்கக் கண்டமல்ல), ஜப்பான் மற்றும் சக்கலின் ஆகிய பகுதிகளை அடைந்து வடக்கு ஆசியாவை அடைந்தன. ஜப்பானில் கண்டெடுக்கப்பட்ட புதைபடிவங்களிலிருந்து அந்தப் பகுதிகளில் வாழ்ந்த புலிகள், தற்போது தீவுப் பகுதியில் வாழும் உள்ளினங்கள் போலவும் பிராதனப் பகுதியில் வாழ்ந்தவற்றைவிடச் சிறியதாகவும் இருந்தன. உடலளவானது வாழும் இடத்தோடு தொடர்புடையதாக இருப்பதோ (இடம் சார்ந்த வளர்ச்சிக் கொள்கை என்பதைக் காண்க) அல்லது வேட்டையாட உணவு கிடைக்கும் அளவோ இதற்குக் காரணமாக இருக்கலாம். ஹோலுஸீன் காலம் (கடந்த 10,000 ஆண்டுகள்) வரை, புலிகள் போர்னியோவிலும் ஃபிலிப்பைன்ஸின் பாலவான் தீவிலும் வாழ்ந்தன.
இயற்பியல் குணங்கள்:
சைபீரியன் புலி
பூனை இனத்திலேயே மிகவும் நினைவுகூறத்தக்க பெரிதும் அறியப்படுபவையாக இருப்பவை புலிகளே ஆகும் (சிங்கம் நீங்கலாக). இவை துரு-சிவப்பு நிறத்திலிருந்து பழுப்பு-துரு நிற மேல்தோலைப் பெற்றுள்ளன. இவற்றின் நடுப் பகுதியும் அடிப்பகுதியும் வெண்ணிறத்தில் உள்ளன. முகத்தைச் சுற்றி ஒரு வெண்ணிற "வளையம்" காணப்படுகிறது. பழுப்பு அல்லது சாம்பல் நிறத்திலிருந்து துல்லியமான கருப்பு வரை வேறுபடும் பட்டை பட்டையான வடிவமைப்பும் காணப்படுகிறது. இந்தப் பட்டைகளின் வடிவமும் அடர்த்தியும் உள்ளினங்களிடையே வேறுபடுகின்றன (இதே போல் உரோமங்களின் அடிப்படை நிறமும் வேறுபடுகிறது. எடுத்துக்காட்டாக சைபீரியன் புலிகள் பிற புலிகளை விட வெளிர்நிற உரோமங்களைக் கொண்டுள்ளன). ஆனால் பெரும்பாலான புலிகள் சராசரியாக 100 பட்டைகளைக் கொண்டுள்ளன. இந்தப் பட்டைகளின் வடிவமைப்பானது ஒவ்வொரு விலங்கிற்கும் தனிப்பட்ட விதத்தில் அமைந்துள்ளது. மேலும் இவற்றைக் கொண்டு தனித்தனியாக அவற்றை அடையாளங்காண முடிகிறது. இது மனிதர்களை அடையாளங்காண கைரேகைகளைப் பயன்படுத்துவதைப் போன்றதாகும். இருப்பினும் காட்டுப்புலியின் பட்டையின் வடிவமைப்பைப் பதிவு செய்வதில் உள்ள சிரமத்தின் காரணமாக இந்த அடையாளங்காணும் முறையானது பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவதில்லை. புலிகள் வேட்டைக்காக செல்லும்போது பல நிறத்தாலான நிழல்களிலும் நீண்ட புல்வெளிகளிலும் தங்களை மறைத்துக்கொள்ள இந்தப் பட்டைகள் உதவுவதால் இவை தோற்ற மறைப்பு செயலுக்கு உதவுவதற்கான அம்சமாகத் தெரிகிறது. இந்தப் பட்டைகளின் வடிவமைப்பானது புலியின் தோலில் இருக்கிறது. அதன் உரோமங்களை மழித்தெடுத்தாலும் இந்தப் பட்டை அமைப்புகள் நீக்கப்படுவதில்லை. பிற பெரிய பூனைகளைப் போலவே புலிகளின் காதுகளின் பின் பகுதியிலும் ஒரு வெண்ணிறப் புள்ளி உள்ளது.
காட்டில் காணப்படும் பூனைகளில் மிகப் பெரியதாக இருப்பது புலிகளின் கூடுதல் தனித்தன்மையாகும். மிக வலுவான கால்களையும் தோள்களையும் பெற்றுள்ள இவை சிங்கங்களைப் போலவே பெரும்பாலும் தன்னை விட எடையில் அதிகமான விலங்குகளையும் இழுத்து வேட்டையாடக்கூடிய திறனைப் பெற்றுள்ளன. இருப்பினும் பெர்க்மானின் விதியால் தீர்மானிக்கப்பட்டபடி வளர்ச்சியானது அகலக்கோட்டுக்கு நேர்விகிதத்தில் அதிகரித்துக்கொண்டே வருவதாகத் தெரிகிறது. மேலும் குறிப்பிடுமளவுக்கு அளவில் இவை பெரிதும் வேறுபடுகின்றன. இப்படி பெரிய ஆண் சைபீரியன் புலிகள் (பாந்தெரா டைகிரிஸ் அல்டைக்கா) "வளைவுகளுடன் சேர்த்து அளவிடுகையில்" ("கால்களுக்கிடைப்பட்ட தூரம்" 3.3 மீ) 3.5 மீ வரையிலான நீளமும் 306 கிலோகிராம்கள் எடையும் கொண்டவை, இவை சுமத்ரா தீவுகளில் வாழும் 75-140 கி.கி எடை கொண்ட சிறிய புலிகளைக் காட்டிலும் குறிப்பிடுமளவு மிகப் பெரியவை. ஒவ்வொரு உள்ளினத்திலும் பெண் புலிகள் ஆண் புலிகளை விடச் சிறியதாகவே உள்ளன. பெண் புலிகளைக் காட்டிலும் 1.7 மடங்கு அதிக எடை கொண்ட ஆண் புலிகள் கூட உள்ளதால் பெரிய உள்ளினங்களில் ஆண் மற்றும் பெண் புலிகளுக்கிடையே உள்ள அளவு வேறுபாடானது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக பெண் புலிகளை விட ஆண் புலிகள் அகலமான முன் பாதங்களைப் பெற்றுள்ளன. இந்தப் பெரும் வேறுபாட்டை உயிரியலாளர்கள் புலிகளின் வழித் தடத்தை வைத்து அவற்றின் பாலினத்தைக் கண்டறியப் பயன்படுத்துகின்றனர். முன்பகுதியில் தாழ்ந்தோ அல்லது தட்டையாகவோ இல்லாவிட்டாலும் புலியின் மண்டை ஓடானது சிங்கத்தின் மண்டை ஓட்டைப் போலவே உள்ளது. இது சிறிது நீண்ட விழிகுழியின் பின் பகுதியைக் கொண்டுள்ளது. சிங்கத்தின் மண்டை ஓடானாது அகன்ற நாசித் துளைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும் இவ்விரு இனங்களுக்குமான மண்டை ஓட்டின் வேறுபாட்டின் அளவு குறைவாக இருப்பதன் காரணமாக வழக்கமாக கீழ்த் தாடையின் அமைப்பைப் பயன்படுத்துவதே இனங்களை அறிவதற்கு நம்பகமானது.
வங்கப்புலி:
புலி இனத்தில் எட்டு கிளையினங்கள் உள்ளன, அவற்றில் இரண்டு அழிந்துவிட்டன. வரலாற்றின்படி இவை இந்தோனேசியாவின் சில தீவுகள் உட்பட வங்காளதேசம், சைபீரியா, ஈரான், ஆப்கானிஸ்தான், இந்தியா, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா எனப் பரவியிருந்தன (தற்சமயம் வெகுவாகக் குறைந்துவிட்டன). தற்சமயம் வாழும் கிளையினங்கள், அவற்றின் வன உயிர்த்தொகையின் இறங்கு வரிசையில் இங்கே தரப்பட்டுள்ளன:
* வங்கப்புலி அல்லது வங்காள அரசப்புலி (பாந்தெரா டைகிரிஸ் டைகிரிஸ்), இவை இந்தியா, வங்காளதேசம், நேபாளம், பூடான் மற்றும் பர்மா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இதன் வெவ்வேறு வாழ்விடங்கள்: புல்வெளிகள், துணை வெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல மழைக்காடுகள், புதர்க்காடுகள், ஈரப்பத மற்றும் வறண்ட இலையுதிர்க்காடுகள் மற்றும் சதுப்புநிலங்கள் ஆகும். பொதுவாக காடுகளில் உள்ள ஆண்புலிகளின் எடை 205 முதல் 227 கி.கி (450-500 பவுண்ட்) ஆகவும், பெண்புலிகளின் சராசரி எடை 141 கி.கி வரையிலும் இருக்கும். இருப்பினும், வட இந்தியப் புலிகளும் வங்கப்புலிகளும் இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதிகளில் காணப்படுபவற்றை விட சற்று கொழுத்தவையாக உள்ளன. இந்த ஆண் புலிகள் சராசரியாக 235 kilograms (520 lb) எடை கொண்டவையாக உள்ளன. ஏற்கனவே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், புலிகளின் எண்ணிக்கை 2000-த்திற்கும் குறைவாக இருப்பதாக நம்பினார்கள். இந்திய அரசின் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் மிக சமீபத்திய கணக்கெடுப்பின் படி, காடுகளில் புலிகளின் எண்ணிக்கை வெறும் 1,411 (1165-1657 வரை புள்ளிவிவரப் பிழையை அனுமதிக்கின்றது) என்று தேராயமாக மதிப்பிட்டு இருக்கிறார்கள். இது கடந்த பத்தாண்டுகளில் 60% குறைந்துள்ளது. 1972 ஆம் ஆண்டு முதல் வங்கப்புலிகளைப் பாதுகாக்க புலிகள் பாதுகாப்புத் திட்டம் எனப்படும் அரிய வனவிலங்குப் பாதுகாப்புத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டமானது வனவிலங்கு பாதுகாப்புத் திட்டங்களுள் வெற்றிகரமான ஒன்றாகக் கருதப்படுகிறது[மேற்கோள் தேவை]. இருப்பினும் ஒரு புலிகள் சரணாலயமானது (சரிஸ்கா புலிகள் சரணாலயம்) அதன் மொத்த புலிகளின் எண்ணிக்கையையும் வேட்டையாடுவதன் காரணமாக இழந்து விட்டது.
இந்தியசீனப் புலி
* இந்தியசீனப் புலி (பாந்தெரா டைகிரிஸ் கார்பெட்டி ), கார்பெட்டின் புலி என்றும் அழைக்கப்படுகிறது. இவை கம்போடியா, சீனா, லாவோஸ், பர்மா, தாய்லாந்து மற்றும் வியட்னாம் ஆகியவற்றில் வாழ்கின்றன. இந்தப் புலிகள் வங்கப்புலிகளை விட சிறியதாகவும் கருப்பாகவும் இருக்கின்றன: இவற்றில் ஆண்புலிகளின் எடை 150 முதல் 190 கி.கி (330–420 பவுண்ட்) ஆக உள்ளது. பெண் புலிகளின் எடை இவற்றை விடக் குறைவாக 110-140 கி.கி (242–308 பவுண்ட்) ஆக இருக்கும். மலைகள் அல்லது உயரமான பகுதிகளில் உள்ள காடுகளே அவற்றின் விருப்பமான வாழ்விடங்களாகும். இந்தியசீனப் புலிகளின் எண்ணிக்கை சுமார் 1200 முதல் 1800 வரை உள்ளது. இவற்றில் சில நூறுகள் மட்டுமே காடுகளில் மீதமுள்ளன. சட்டத்திற்கு புறம்பாக வேட்டையாடுதல், முதன்மை இரை இனங்களான மான் மற்றும் காட்டுப்பன்றி போன்றவற்றை சட்டத்திற்குப் புறம்பாக வேட்டையாடுவதால் ஏற்படும் இரைப் பற்றாக்குறை, வாழ்விடத் துண்டாக்கம் மற்றும் இனக்கலப்பு போன்றவற்றால் தற்போது இருக்கும் எண்ணிக்கையை தக்கவைத்தல் என்பது மிகவும் கடினம். வியட்னாமில் சீனர்களின் மருந்துக்கடைகளுக்கு இருப்பு வழங்கவதற்காக அவற்றின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட முக்கால்வாசி புலிகள் கொல்லப்பட்டுவிட்டன.
மலேயப் புலி
* மலேயப் புலிகள் (பாந்தெரா டைகிரிஸ் ஜேக்சோனி), மலாய் தீபகற்பத்தின் தெற்குப்பகுதியில் மட்டுமே காணப்பட்டன. அங்கு 2004 ஆம் ஆண்டு வரை ஒரு கிளையினமாக கருதப்படாமல் இருந்தது. அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் பயிற்சி நிறுவனத்தின் பகுதியான மரபியல் வேறுபாட்டுக்கான ஆய்வுக்கூடத்திலிருந்து, லியோ எட் ஆல் அவர்களின் ஆய்வு வந்த பிறகு புதிய வகைப்பாடு தோன்றியது. சமீபத்திய கணெக்கெடுப்பானது காடுகளில் 600-800 புலிகள் இருப்பதாகக் காண்பித்தது. இதுவே புலிகளின் எண்ணிக்கையில் வங்கப்புலிகள் மற்றும் இந்தியசீனப் புலிகளுக்கு அடுத்ததாக மலேயப் புலிகளுக்கு மூன்றாவது இடத்தைப் பெற்றுத்தந்தது. முக்கியப் பகுதிகளில் வாழும் புலிகளின் கிளையினங்களில் மலேயப் புலி தான் மிகவும் சிறியதும் வாழும் கிளையினங்களில் இரண்டாவதும் ஆகும். சராசரியாக எடையளவு, ஆண் புலிகள் 120 கி.கி மற்றும் பெண்புலிகள் 100 கி.கி ஆகும். மலேயப்புலியானது மலேசியாவில் கோட் சின்னங்களிலும் மேபேங்க் போன்ற மலேசிய நிறுவனங்களின் சின்னங்களிலும் தேசிய உருவமாகத் திகழ்கிறது.
சுமத்திராப் புலி
* சுமத்திராப் புலி (பாந்தெரா டைகிரிஸ் சமத்ரயி), இது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மட்டுமே காணப்படுகின்றது. மேலும் மிகவும் ஆபத்தானது. வாழும் புலியின் கிளையினங்கள் அனைத்திலும் மிகச்சிறியது, வயதுவந்த ஆண்புலிகளின் எடை 100 - 140 கி.கி (220–308 பவுண்ட்) மற்றும் பெண்புலிகளின் எடை 75–110 கி.கி (154–242 பவுண்ட்). அவற்றின் இந்த சிறிய அளவானது அவைகள் வாழும் சுமத்ரா தீவின் கடினமான அடர்ந்த காடுகளுக்கு ஏற்றதாகவும் அதே போல் சிறிய இரைக்கு ஏற்ற வகையிலுமே அமைந்துள்ளது. காட்டில் இவற்றின் எண்ணிக்கை 400க்கும் 500க்கும் இடைப்பட்டதாக இருக்கும் என்று தோராயமாக கணக்கிடப்படுகிறது. இவை தீவில் உள்ள தேசியப் பூங்காக்களில் அதிகம் காணப்படும். சமீபத்திய மரபணு சோதனையானது அந்த இனம் அழிந்து விடாமல் இருக்கும்பட்சத்தில் அவை ஒரு தனிப்பட்ட இனமாக உருவாகலாம் என்பதைக் குறிக்கும் குறிப்புகள் உள்ளதாக உணர்த்தியது. இதுவே மற்ற கிளையினங்களை விட சுமத்ரா புலிகளைப் பாதுக்காக்க கண்டிப்பாக அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று பரிந்துரைகள் வரக்காரணமாக அமைந்தது. அதுபோல் வாழ்விடங்களை அழித்தலே தற்போதைய புலிகளின் எண்ணிக்கைக்கு முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது (தேசியப் பூங்காக்களிலும் இது போன்ற செயல்களின் பதிவுகள் தொடர்கின்றன), 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளுக்கு இடையே மட்டும் 66 புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அல்லது மொத்த எண்ணிக்கையில் சுமார் 20% குறைந்துள்ளது.
சைபீரியன் புலி
* சைபீரியன் புலி (பாந்தெரா டைகிரிஸ் அல்டைகா), இது அமுர், மஞ்சுரியன், அல்டைக், கொரியன் அல்லது வடக்கு சீனப் புலி என்றும் அறியப்படுகிறது. இது கிழக்கு சைபீரியாவின் தூரத்தில் உள்ள பிரிமோர்ஸ்கை க்ரையின் பகுதியான அமுர்-உஸ்ஸூரி மற்றும் ஹபரோவ்ஸ்க் க்ரை ஆகியவற்றுக்குள் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுவே மிகப்பெரிய கிளையினமாகக் கருதப்பட்டது. தலையுடன் சேர்த்து உடலின் நீளம் 190–230 செ.மீ (ஒரு புலியின் வாலின் நீளம் 60–110 செ.மீ) மற்றும் சராசரி ஆண் புலிகளின் எடை 227 kilograms (500 lb), அமுர் புலியானது கெட்டியான அதன் தோலுக்காகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் வெளிர் தங்கநிறத்தாலும் சில பட்டைகளாலும் தனிப்பட்ட முறையில் அடையாளங்காணப்படுகிறது. காட்டில் வாழும் பெருத்த சைபீரியன் புலியின் எடை 384 கி.கி எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மஸாக்கின் கூற்றுப்படி இந்த உருவத்தில் பெரிய புலிகளைப்பற்றி ஏற்றுக்கொள்ளக்கூடிய குறிப்புகள் எதுவும் உறுதி செய்யவில்லை. இருந்தாலும் பிறந்து ஆறு மாதமான சைபீரியன் புலியானது முழுவதும் வளர்ந்த சிறுத்தைப் புலியைப் போலப் பெரியதாக இருக்கும். கடந்த இரண்டு கணக்கெடுப்பின்படி (1996 மற்றும் 2005), 450-500 அமுர் புலிகள் தனியாக மற்றும் ஏறக்குறைய தொடர்ச்சியாகவும் பரவிக் காணப்படுகின்றன. இது உலகின் பிரிக்கப்படாத புலிகளின் இனத்தில் ஒன்றாக உள்ளது. 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற மரபணு ஆராய்ச்சியில் சைபீரியன் புலிகளும் மேற்கு "காஸ்பியன் புலிகளும்" (இவை கடந்த 1950களில் காடுகளிலிருந்து அழிந்தவிட்ட இரு வேறு கிளையினங்களாகக் கருதப்பட்டன) இயல்பாக ஒரே கிளையினத்தைச் சேர்ந்தவை. இங்கு கடந்த நூற்றாண்டில் மனிதனின் கண்டுபிடிப்புகளினால் இந்த இரண்டு எண்ணிக்கைகளுக்குமான வேறுபாடானது மிகச் சமீபத்தில் ஏற்பட்டிருக்கலாம்.
தென்சீனப் புலி
* தென்சீனப் புலி (பாந்தெரா டைகிரிஸ் அமோயேன்சிஸ்), அமோய் அல்லது ஜியாமென் புலி என்றும் அறியப்படுகிறது. இது புலியின் கிளையினங்களில் மிகவும் அதிக ஆபத்தானது மற்றும் உலகின் அதிக ஆபத்தான 10 விலங்குகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இது புலியின் கிளையினங்களில் சிறியவற்றுள் ஒன்று தென்சீனப் புலிகளில் ஆண் மற்றும் பெண் புலிகளின் நீள வரம்பு 2.2–2.6 m (87–100 in) இவற்றுக்கு இடையே உள்ளது. ஆண் புலிகளின் எடை 127 கி.கி. மற்றும் 177 கி.கி. (280–390 பவுண்ட்) இடையேயும் பெண் புலிகளின் எடை 100 கி.கி. மற்றும் 118 கி.கி. (220–260 பவுண்ட்) இடையேயும் இருக்கும். 1983 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையில் தென்சீனப் புலிகள் எதுவும் காணப்படவில்லை. 2007 ஆம் ஆண்டில் விவசாயி ஒருவர் இவ்வகைப் புலியைப் பார்த்ததாகக் கூறி, ஆதாரமாக புகைப்படங்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அந்தப் புகைப்படமானது சந்தேகத்திற்குரியதாக இருந்தது. பின்னர் அந்தப் புகைப்படம் போலியானது என்பதும் சீனக் காலெண்டரில் இருந்து நகலெடுத்து ஃபோட்டாஷாப்பில் வடிவமைக்கப்பட்டது என்பதும் வெளிப்பட்டது. அந்த “உருவகம்” மிகப்பெரிய புரளியானது.
1977 ஆம் ஆண்டில் சீன அரசாங்கம், காடுகளில் உள்ள புலிகளைக் கொல்லுவதைத் தடைசெய்ய ஒரு சட்டத்தைப் பிறப்பித்தது. ஆனால் இச்சட்டம் கிளையினத்தைக் காப்பதற்கு மிகவும் தாமதமாகப் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. ஏனெனில் அது ஏற்கனவே காடுகளில் இருந்து அழிந்துவிட்டது. சீனாவில் தற்போது 59 தென்சீனப் புலிகள் சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. ஆனால் இவை ஆறு விலங்குகளில் இருந்து உருவானவை மட்டுமே என அறியப்படுகின்றன. ஆகவே கிளையினத்தைத் தக்கவைப்பதற்குத் தேவையான மரபியல் வேறுபாடு இப்போது இல்லாமல் போய்விட்டிருக்கலாம். தற்போது இந்த புலிகளை காடுகளில் மறுபடியும் உருவாக்க அங்கு இனப்பெருக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.
அழிந்துவிட்ட கிளையினங்கள்
பாலினேசிப் புலி
* பாலினேசி புலி (பாந்தெரா டைகிரிஸ் பாலிகா), பாலி தீவு எல்லைக்குள் மட்டுமே இருந்தது. அவை அனைத்து புலி கிளையினங்களிலேயே மிகவும் சிறியதாக இருந்தன. அத்துடன் ஆண்புலிகளின் எடை 90-100 கி.கி. ஆகவும் பெண் புலிகளின் எடை 65-80 கி.கி. ஆகவும் இருந்தன. இந்தப் புலிகள் வேட்டையாலேயே அழிந்துபோயின-கடைசி பாலினேசி புலியானது 27 செப்டம்பர் 1937 அன்று மேற்கு பாலியில் உள்ள சும்பர் கிமா என்ற இடத்தில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது வயதுவந்த பெண் புலியாகும். எந்த பாலினேசிப் புலியும் காப்பகப்படுத்தப்படவில்லை. இந்தப் புலியானது பாலினேசி இந்து சமயத்தில் இன்றும் முக்கியப்பங்கு வகிக்கிறது.
ஜாவாப்புலி
* ஜாவாப் புலி (பாந்தெரா டைகிரிஸ் சண்டைகா), இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்குள் மட்டுமே இருந்தது. தற்போது இந்தக் கிளையினமானது வேட்டையாடுதல் மற்றும் காடுகள் அழிப்புகளின் விளைவாக 1980களிலே அழிந்துவிட்டதாகத் தோன்றுகிறது. ஆனால் இந்த கிளையினத்தின் அழிவு 1950கள் முதல் நிகழத் தொடங்கியிருக்கலாம் என்று நம்பப்பட்டது (அப்பொழுது காடுகளில் 25க்கும் குறைவானவை மீதம் இருந்ததாகக் கணிக்கப்பட்டு இருக்கிறது). கடைசியாக 1979 ஆம் ஆண்டில் அவற்றின் மாதிரியைப் பார்த்ததாக உறுதிசெய்யப்பட்டது. ஆனால் 1990களில் உருவகங்கள் இருந்ததாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆண் புலிகள் 100-141 கி.கி எடையுடனும் பெண் புலிகள் 75-115 கி.கி எடையுடனும் இருந்தன. ஜாவாப் புலிகள் மிகச்சிறிய புலி கிளையினங்களில் ஒன்றாக இருந்தது. இவை அளவில் தோராயமாக சுமத்திராப் புலிகளைப் போன்றே இருந்தன.
கலப்பினங்கள்
புலிகள் உட்பட பெரிய பூனைகளிடையே கலப்பினமாக்கலின் கருத்து, 19ஆம் நூற்றாண்டில் முதலில் உருவானது. அப்பொழுது குறிப்பாக விலங்கியல் பூங்காக்கள், விநோதமாக காண்பித்து வியாபாரப் பெருக்கத்திற்காக கலப்பினமாக்கலில் நாட்டம் செலுத்தின. லிகர்கள் மற்றும் டைகான்கள் எனப்படும் கலப்பினங்களை உருவாக்க சிங்கங்களை புலிகளுடன் (அதிகமாக அமுர் மற்றும் வங்கப்புலி கிளையினங்கள்) இனப்பெருக்கம் செய்ததாக அறியப்பட்டது. இப்படிப்பட்ட கிளையினங்கள் விலங்கியல் பூங்காக்களில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யப்பட்டன. ஆனால் இனங்கள் மற்றும் கிளையினங்களைக் காக்கவேண்டும் என்பது வலுப்பெற்றதால் கலப்பினமாக்கல் இப்பொழுது ஊக்கம் இழந்துள்ளது. கலப்பினங்கள், சீனாவில் உள்ள தனியார் அருங்காட்சியகங்களிலும் விலங்கியல் பூங்காக்களிலும் இன்னமும் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.
லிகர் என்பது ஆண் சிங்கம் மற்றும் பெண் புலி இடையே இனப்பெருக்கம் செய்யப்பட்ட கலப்பினமாகும். ஏனெனில் தந்தை சிங்கம் ஒரு வளர்ச்சியை மேம்படுத்தும் மரபணுவை செலுத்துகிறது. ஆனால் அதேபோன்று பெண் புலியிடமிருந்து வரும் வளர்ச்சியைத் தடுக்கும் மரபணு வராததால் லிகர்கள் தனது பெற்றோரில் ஒன்றை விட அதிக வளர்ச்சியடைகின்றன. அவை தனது பெற்றோர் இனங்கள் இரண்டின் உடல் மற்றும் நடத்தைகளையும் பகிர்ந்துள்ளன (சந்தன வண்ணப் பின்புலத்தில் புள்ளிகள் மற்றும் பட்டைகள்). ஆண் லிகர்கள் மலட்டுத்தன்மையுடையன, ஆனால் பெண் லிகர்கள் பெரும்பாலும் இனப்பெருக்கத்திறன் கொண்டுள்ளன. ஆண் லிகர்களுக்கு பிடரி மயிர் கொண்டிருப்பதற்கு 50% வாய்ப்புள்ளது. இருப்பினும் அவற்றின் பிடரி மயிரானது அசல் சிங்கத்தினது அளவில் பாதியளவே இருக்கும். லிகர்கள் பொதுவாக 10 முதல் 12 அடி வரை நீளத்தைக் கொண்டுள்ளன. அவற்றின் எடை 800 முதல் 1000 பவுண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம்.
அரிதான டைகான் என்பது பெண் சிங்கம் மற்றும் ஆண் புலி ஆகியவற்றின் கலப்பினமாகும்.
நிற வேறுபாடுகள்
வெள்ளைப் புலிகள்
வெள்ளைப் புலி நன்கு அறிந்த மரபணு சடுதி மாற்றத்தால் உருவாக்கப்பட்டது. தொழிநுட்பப்படி அது சின்சில்லா அல்பினிஸ்டிக் என்று அறியப்படுகிறது. இது காடுகளில் அரிதாக இருந்தாலும் அதன் பிரபலத்துக்காக விலங்கியல் பூங்காக்களில் அதிகம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. வெள்ளைப் புலிகளின் இனப்பெருக்கம் பல சமயங்களில் உள்ளினப் பெருக்கத்திற்கு (தனித்தன்மை பின்னடைவதால்) வழிநடத்தும். கிளையினங்களை இனக்கலப்பு செய்யும் செயலில் பெரும்பாலும் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க, வெள்ளை மற்றும் ஆரஞ்சுப் புலிகளின் புணர்ச்சியில் நிறைய புது முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. இது போன்ற உள்ளினக்கலப்பு, வெள்ளைப் புலிகள் பிறக்கும்போதே வெட்டப்பட்ட மேல்தாடை மற்றும் பக்கவளைவு (வளைந்த முதுகுத்தண்டு) போன்ற உடல் ஊனத்துடன் இருப்பதற்கு வழிவகுக்கிறது. மேலும், வெள்ளைப் புலிகள் மாறு கண்களைக் (இதுவே மாறுகண் எனப்படுகிறது) கொண்டிருக்க வாய்ப்புள்ளது. திடகாத்திரமானதாகத் தோன்றும் வெள்ளைப் புலிகளும் கூட பொதுவாக அவற்றின் ஆரஞ்சு புலிகளைப் போல நீண்டநாள் வாழாது. வெள்ளைப் புலிகள் குறித்தப் பதிவுகள் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் முதலில் நடைபெற்றன. அதன் பெற்றோர் புலிகள் இரண்டும் வெள்ளைப் புலிகளின் அரிதான மரபணுவைப் பெற்றிருந்தால் மட்டுமே அவை நிகழ்கின்றன. இந்த மரபணுவானது ஒவ்வொரு 10,000 பிறப்புகளில் ஒன்றிற்கு மட்டுமே நிகழும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வெள்ளைப் புலி என்பது ஒரு தனிப்பட்ட கிளையினம் அல்ல. அது ஒரு நிற மாறுபாடே ஆகும்; காட்டில் காணப்பட்ட ஒரே வெள்ளைப் புலி இனம் வங்கப்புலிகள் மட்டுமே (காப்பகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து வெள்ளைப் புலிகளுமே குறைந்தபட்சம் வங்கப்புலி வகையைச் சேர்ந்தவையே ஆகும்), வெள்ளை நிறத்திற்குக் காரணமாக்க இருக்கும் ஒடுங்கிய பண்பு கொண்ட மரபணு வங்கப்புலிகளின் மூலமே வருகிறது என்று பொதுவாகக் கருதப்பட்டது. இருப்பினும் இதற்கான காரணங்கள் அறியப்படவில்லை. பொதுவாக புலிகளை விட இவை மிகவும் ஆபத்தானவை என்ற பொதுவான ஒரு தவறான கருத்தும் உள்ளது. வெள்ளைப் புலியின் பட்டைகளில் நிறமி இருப்பது தெளிவாக வெளிப்படை எனினும் வெள்ளைப் புலிகள் வெளிரியவை என்பது மற்றொரு தவறான கருத்து. அவை அவற்றின் வெள்ளைச் சாயலில் மட்டுமே மாறுபடவில்லை. அவை ஊதாக் கண்கள் மற்றும் இளஞ்சிவப்பு நிற மூக்குகளையும் பெற்றுள்ளன.
தங்கநிறப் பட்டைப் புலிகள்
கூடுதலாக மற்றொரு ஒடுங்கிய பண்பு மரபணுவானது, மிகவும் வழக்கத்திற்கு மாறான "தங்கநிறப் பட்டை" நிற வேறுபாட்டை உருவாக்கலாம், சிலநேரங்களில் அது "ஸ்ட்ராபெர்ரி" எனவும் அறியப்படுகிறது. தங்கநிறப் பட்டைப் புலிகளானது வெளிர் தங்கநிற மென்மயிர், வெளிரிய கால்கள் மற்றும் மங்கிய ஆரஞ்சுநிறப் பட்டைகளையும் கொண்டுள்ளன. அவற்றின் மென்மயிரானது பெரும்பாலும் இயல்பைவிட சற்று கடினமானதாக இருக்கும். தங்கநிறப் பட்டைப் புலிகளின் எண்ணிக்கை மொத்தம் 30. இதில் மிகக் குறைவானவையே காப்பகப் படுத்தப்பட்டுள்ளன. வெள்ளைப் புலிகளைப் போன்றே ஸ்ட்ராபெர்ரி புலிகளும் வங்கப்புலிகளின் வகையைச் சேர்ந்தவையே ஆகும். பல மரபுக்கலப்புப் புலிகள் என்று அழைக்கப்படுகின்ற சில தங்கநிறப் பட்டைப் புலிகள் வெள்ளைப் புலியின் மரபணுவைக் கொண்டுள்ளன. இத்தகைய இரண்டு புலிகளைக் கலப்பினம் செய்யும்போது சில பட்டையில்லாத வெள்ளைச் சந்ததியை உருவாக்கலாம். வெள்ளை மற்றும் தங்கநிறப் பட்டைப் புலிகள் இரண்டுமே பெரும்பாலும் சராசரி வங்கப்புலிகளை விட பெரியதாக இருக்கின்றன.
பிற நிற வேறுபாடுகள்
"ஊதா" அல்லது பலகைக் கல்நிறப் புலி, மால்டீஸ் புலி மற்றும் அதிகபட்ச அல்லது முழுமையான கருப்புப் புலிகள் ஆகியவையும் உள்ளதாக சில உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் கூறுகின்றன, இவை ஊகங்களாகவே உள்ளன. உண்மையாக இருந்தால் தனிப்பட்ட இனங்களாக இல்லாமல் இடைவெளியிட்ட மரபணு சடுதி மாற்றமாகவே இருக்கும்.
உயிரியல் மற்றும் நடத்தை
இடம் சார்ந்த நடத்தை
புலிகள் தனியாக வாழ்வன, அவை இடம்சார்ந்த விலங்குகள் ஆகும். புலியின் வாழ்விட அளவு வரம்பானது முதன்மையாக இரை கிடைக்கக்கூடிய தமையைச் சார்ந்தது. மேலும் ஆண் புலிகள் பெண் புலிகளை அடைவதற்கான வாய்ப்பையும் பொருத்தது. ஒரு பெண் புலியானது அதன் இருப்பிடமாக 20 சதுர கிலோமீட்டர்கள் பரப்புள்ள இடத்தைக் கொண்டிருக்கும். இருப்பினும் ஆண் புலிகளின் இருப்பிடம் சற்று அதிகம். அவை 60–100 கி.மீ இடத்தில் வசிக்கின்றன. ஆண் புலிகளின் எல்லை வரம்பில் சில பெண்புலிகளின் எல்லைகளும் அடங்குகின்றன.
வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்தி புலிகள் காட்டில் ஆராயப்பட்டிருக்கின்றன. புலிகளின் எண்ணிக்கை கடந்தகாலங்களில் அவற்றின் கால்தடங்களின் ப்ளாஸ்டர் அச்சுத்தடங்களைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்டன. இந்த முறை தவறானது எனக் கண்டறியப்பட்டது அதற்குப் பதிலாக கேமராப் பதிவைப் பயன்படுத்த முயற்சிக்கப்பட்டது. அவற்றின் கழிவுகளிலிருக்கும் DNA அடிப்படையில் மதிப்பிடும் புதிய உத்திகளும் உருவாகி வருகின்றன. காடுகளில் ஆராய்ந்து அவற்றை தடமறிதலுக்கு ரேடியோ கழுத்துப்பட்டைகளும் பிரபலமான அணுகுமுறையாக இருந்திருக்கிறது.
வேட்டையாடுதலும் உணவும்
புலியின் பல்லமைப்பு. பெரிய கோரைப்பற்கள் இரையைக் கடித்துக் கொல்லப் பயன்படுகின்றன. ஆனால் அவை உண்ணும் போது கோரைபற்களை கறியைக் கிழிக்கப் பயன்படுத்துகின்றன.
காடுகளில் புலிகள் பெரிய மற்றும் நடுத்தர அளவிலான விலங்குகளை அதிகம் உண்கின்றன. சாம்பார் மான், காட்டெருமை, சீதல் மான், காட்டுப்பன்றி, நீலான் மான், நீர் எருமை மற்றும் எருமை ஆகியவையே இந்தியாவில் புலிகளின் பிடித்தமான இரையாகும். சிலநேரங்களில் இவை சிறுத்தைகள், மலைப்பாம்புகள், ஸ்லோத் கரடிகள் மற்றும் முதலைகள் ஆகியவற்றையும் உண்கின்றன. சைபீரியாவில் இவற்றின் முக்கிய இரையினங்கள் மஞ்சூரியன் வாப்பிடி மான், காட்டுப்பன்றி, சைகா மான், கடமான், ரோய் மான் மற்றும் கஸ்தூரி மான் ஆகியவையாகும். சுமத்ராவில் சாம்பார் மான், முண்ட்ஜக் மான், காட்டுப்பன்றி மற்றும் மலேசியப் பன்றி ஆகியவை இவற்றின் இரையினங்களாகும். காஸ்பியன் புலியின் முன்னாள் வரம்பில் சைகா ஆண்ட்டிலோப் மான், ஒட்டகங்கள், கௌகசியன் காட்டெருமை, யாக் மாடு மற்றும் காட்டுக்குதிரை ஆகியவை இரையினங்களாக இருந்தன. நிறைய ஊனுண்ணிகளைப் போலவே இவையும் சந்தர்ப்பவாதிகள் ஆகும். அவை குரங்குகள், மயில்கள், குழி முயல்கள் மற்றும் மீன் போன்ற மிகச்சிறிய இரைகளையே உண்ணுகின்றன.
வயதுவந்த யானைகளை பொது இரையாக உண்பது மிகவும் கடினம். ஆனால் புலிகள் மற்றும் யானைகளுக்கு இடையே ஏற்படும் சண்டையிடும் சில நேரங்களில் யானை இரையாவதும் உண்டு. ஒரு சமயம் ஒரு புலியானது ஒரு வயதுவந்த இந்தியக் காண்டாமிருகத்தை கொன்றதாக அறியப்பட்டுள்ளது. இளம் யானை மற்றும் காண்டாமிருகக் குட்டிகளையும் எப்போதாவது இரையாகக் கொள்ளப்படுகின்றன. புலிகள் சில நேரங்களில் நாய்கள், பசுக்கள், குதிரைகள் மற்றும் கழுதைகள் போன்ற வீட்டு விலங்குகளையும் இரையாக்கிக்கொள்கின்றன. இவை விளையாட்டுக் கொல்லிகள் என அழைக்கப்படாமல் கால்நடைத் திருடர்கள் அல்லது கால்நடைக் கொல்லிகள் எனப்படுகின்றன.
வயதான புலிகள் அல்லது காயம்பட்ட புலிகள் அவற்றின் இயற்கையான இரையை பிடிக்க முடியாத போது மனித உண்ணிகளாக மாறியுள்ளன; இந்த நிகழ்வு இந்தியாவில் அடிக்கடி நிகழ்ந்துள்ளது. சுந்தரவனக் காடுகளைச் சேர்ந்தவை இதற்கு விதிவிலக்காகும். இங்கு திடகாத்திரமான புலிகள், காட்டுப் பொருட்களைத் தேடிவரும் மீனவர்கள் மற்றும் கிராமவாசிகளைக் கொன்று உண்கின்றன. இதன் அர்த்தம் மனிதர்கள் புலியின் உணவில் சிறிய பங்கே என்பதாகும். புலிகள் சிலசமயங்களில் நார்ச்சத்து உணவுக்காக தாவரங்களை உண்ணும், ஸ்லோ மேட்ச் மரத்தின் பழம் அதற்கு மிகவும் பிடித்ததாக இருக்கிறது.
புலிகளின் அதிக வலிமையான தாடைகளும் கூரிய பற்களும் அவற்றை சிறந்த வேட்டையினமாக உருவாக்குகின்றன.
புலிகள் வழக்கமாக இரவில்தான் வேட்டையாடும். பொதுவாக அவை தனியாகவே வேட்டையாடும். பெரும்பாலான பூனை இனங்களைப் போலவே பதுங்கியிருந்து எந்தக் கோணத்திலிருந்தும் பாய்ந்து தனது உடலின் அதிகமான திறனைச் செலுத்தி தனது உடல் அளவையும் வலிமையையும் பயன்படுத்தி பெரிய இரையையும் நிலைகுலையச் செய்யும். அதிக எடையைக் கொண்டிருந்தாலும் புலிகள் 49-65 கிலோமீட்டர்கள்/மணி (35-40 மைல்கள்/மணி) என்ற வேகத்தில் செல்லக்கூடியவை. இருப்பினும் புலிகளின் திண்மைக் குறைவு என்பதால் மிகக் குறுகிய தொலைவு மட்டுமே இவை இவ்வேகத்தில் செல்ல முடியும். இதனால் புலிகள் இரையைத் தாக்கத் தொடங்கும் முன்பு இரைக்கு மிகநெருக்கமாக இருக்க வேண்டியது அவசியம். புலிகள் சிறப்பாக தாவும் திறனைப் பெற்றுள்ளன; அது கிடைமட்டமாக 10 மீட்டர்கள் தாவியுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கமாக இதில் பாதியளவிலேயே தாவல்கள் இருக்கின்றன. இருப்பினும் இருபது வேட்டைகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிகரமாக இரையைக் கொள்ள முடிகிறது.
பெரிய இரையை வேட்டையாடும்போது புலிகள் பெரும்பாலும் முதலில் அவற்றின் தொண்டையைக் கடிக்கின்றன. முன்னங்கால்களைப் பயன்படுத்தி இரையைப் பிடித்து தரையில் இழுத்துத் தள்ளுகின்றன. புலியானது இரையின் மீது கிடுக்குப்பிடி போட்டு சாகும்வரை இரையின் கழுத்தை நெருக்குகிறது. இந்த முறையில் புலிகள் தம்மைவிட சுமார் ஆறு மடங்கு அதிக எடையுள்ள காட்டெருமை மற்றும் நீர் எருமைகளைக் கொல்கின்றன. சிறிய இரையை புலிகள் அதன் பிடரியைக் கடிக்கின்றன. பெரும்பாலும் தண்டுவடத்தை உடைத்தல், மூச்சுகுழலைக் கடித்தல், அல்லது தொண்டைக் குருதிச் சிரையை அல்லது கரோட்டிட் தமனியைக் கடித்து உடைத்தல்போன்ற முறைகளில் கொல்கிறது. புலிகள் இரையைக் கொல்ல தனது பாதநகங்களால் தாக்குவதும் வீட்டு விலங்குகளின் மண்டையோட்டை நொறுக்கும் அளவுக்கு போதுமான பலமுள்ளதாக இருக்கிறது. இருப்பினும் இந்தத் தாக்குதல் முறை அரிதானதாகவே அறியப்படுகிறது. மேலும் ஸ்லோத் கரடிகளைத் தாக்கும்போது அவற்றின் முதுகை உடைக்கின்றன.
1980களில் ரந்தம்பூர் தேசியப்பூங்காவில் "கெங்ஹிஸ்" என்று பெயரிடப்பட்ட ஒரு புலியானது தனது இரையை அடிக்கடி ஆழமான ஏரி நீரில் வேட்டையாடுகின்றது என அறியப்பட்டது. இந்த 200 ஆண்டுகளுக்கும் மேலான கண்காணிப்புகளில் இதற்கு முன்னர் இந்த மாதிரியான தாக்குதல் குணமானது அறியபட்டிருக்கவில்லை. மேலும் இந்தப் புலி மிகச்சிறந்த வெற்றியாளராகத் தோன்றியது. அதிகபட்சம் அதன் வேட்டைகளில் 20% இரையைக் கொல்வதில் முடிந்துள்ளது.
இனப்பெருக்கம்
புலிகளின் புணர்ச்சி ஆண்டு முழுவதும் நிகழலாம். ஆனால் பொதுவாக நவம்பர் முதல் ஏப்ரல் வரை அதிகம் நடைபெறுகிறது. ஒரு பெண் புலி சில நாட்களுக்கு மட்டுமே இனப்பெருக்கத்திற்கு ஏற்ற நிலையில் இருக்கிறது. அந்தக் கால இடைவெளியில் புணர்ச்சி அடிக்கடி நடைபெறுகிறது. ஒரு இணைப் புலிகள் பொதுவாக பிற பூனையினங்களைப் போலவே சத்தத்துடன் அடிக்கடி புணர்கின்றன. கருவளர் காலம் 16 வாரங்களாகும். ஒவ்வொரு ஈற்றுக்கும் வழக்கமாக 3-4 குட்டிகள், ஒவ்வொன்றும் 1 kilogram (2.2 lb) எடையில் பிறக்கின்றன. அவை பிறப்பிலேயே குருடாகவும் தனியே விட்டப்பட்டவையாகவும் இருக்கின்றன. பெண்புலிகள் அவற்றை தனியாக வளர்க்கின்றன, அவற்றை தோப்புக்கள் மற்றும் பாறைப் பிளவுகள் போன்ற மறைவிடங்களில் பாதுகாக்கின்றன. குட்டிகளின் தந்தைப் புலியானது பொதுவாக அவைகளை வளர்ப்பதில் பங்கெடுப்பதில்லை. பெண் புலிகளானது முந்தைய ஈற்றுக் குட்டிகளை இழந்துவிட்டால் 5 மாதங்களில் அடுத்த ஈற்றுக்குத் தயாராகிவிடுகின்றன என்பதால் பெண்புலியை இனப்பெருக்கத்திற்கு ஏற்றதாக்குவதற்காக சுற்றித்திரியும் தொடர்பில்லாத ஆண் புலிகள் கூட புலிக்குட்டிகளைக் கொன்றுவிடலாம். புலிக்குட்டிகளின் இறப்பு வீதம் மிகவும் அதிகம் - சராசரியாக குட்டிகளில் பாதி இரண்டு வயதுக்கு மேல் பிழைத்து இருப்பதில்லை.
பொதுவாக ஒவ்வொரு ஈற்றிலும் ஒரு மேலாங்கிய குட்டி இருக்கிறது. பொதுவாக அது ஆணாக இருக்கும் ஆனால் அது வேறு பாலினமாகவும் இருக்கலாம். இந்தக் குட்டியானது பொதுவாக சகோதரர்களுடன் விளையாடும்போது ஆதிக்கம் செலுத்துகிறது மற்றும் அதிக சுறுசுறுப்புடன் இருக்கும். அது வழக்கத்தை விட வெகு குறுகிய காலத்திலேயே தாயை விட்டு விலகிச்செல்கிறது. 8 வாரங்களில் குட்டிகள் மறைவிடத்தைவிட்டு வெளியே வந்து தம் தாயைப் பின்தொடரத் தயாராகின்றன. இருப்பினும் அவை வயதாகும் வரை தாய்ப்புலி தனது பிரதேசத்தில் சுற்றித்திரியுமளவுக்கு அவை தாயுடன் பயணிப்பது இல்லை. குட்டிகள் அவற்றின் வயது 18 மாதங்களை நெருங்கும்போது தாயைச் சாராதவையாகின்றன. ஆனாலும் அவை 2–2½ ஆண்டுகள் வயதாகும் வரை தங்கள் தாயைவிட்டுப் பிரிவதில்லை. பெண்புலிகள் பாலின முதிர்ச்சியை 3-4 ஆண்டுகளில் அடைகின்றன. ஆண்புலிகள் 4-5 ஆண்டுகளில் பாலின முதிர்ச்சியை அடைகின்றன.
ஒரு பெண்புலி தனது வாழ்நாளில் சராசரியாக சம எண்ணிக்கையிலான ஆண் மற்றும் பெண் குட்டிகளைப் பிரசவிக்கும். காப்பகப்படுத்தப்பட்ட நிலையில் புலிகளின் இனப்பெருக்கம் நன்றாக உள்ளது. மேலும் அமெரிக்காவில் காப்பகப்படுத்தப்பட்ட புலிகளின் எண்ணிக்கையானது உலக காடுகளில் உள்ள எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கலாம்.
இனங்களுக்கிடையே வேட்டையாடும் தொடர்புகள்
1807 இலண்டனில் வெளியிடப்பட்ட சாமுவேல் ஹாவெட் & எட்வர்டு ஓரம் தங்கள் கைகாளல் வரைந்த தண்ணீர் கலரில் செதுக்கிய சித்திரங்களானது காட்டு நாய்கள் புலியை வேட்டையாடுவதை விளக்குகின்றது.
புலிகள், சிறுத்தைப்புலிகள், மலைப்பாம்புகள் மற்றும் முதலைகள் போன்ற பயங்கர மிருகங்களைக் கூட சிலநேரங்களில் கொல்லலாம். இருப்பினும் வேட்டையினங்கள் பொதுவாக ஒன்றையொன்று கொல்வதைத் தவிர்க்கின்றன. ஒரு முதலையிடம் அகப்படும் போது புலியானது தன் பாதங்களால் அந்த ஊர்வனத்தின் கண்களைத் தாக்கும். சிறுத்தைப்புலியானது நாளின் வெவ்வேறு நேரங்களில் வேட்டையாடுதல் மற்றும் வேறுபட்ட இரையை வேட்டையாடுதல் மூலமாக புலியிடமிருந்து வரும் போட்டியைத் தட்டிக்கழிக்கின்றன. பொதுவாக தேவையான அளவு இரையை கொண்டுள்ளதால் புலிகளும் சிறுத்தைப்புலிகளும் போட்டிச் சண்டைகள் மற்றும் சவன்னா என்ற வெப்பப் புல்வெளிகளில் பொதுவாகக் காணப்படும் இனங்களுக்கிடையேயான மேலாதிக்க நிலைகள் போன்ற சிக்கல்களின்றி வெற்றிகரமாக ஒன்றாக வாழ்கின்றன. இரண்டு இனங்கள் சேர்ந்து வாழும் பகுதிகளில் புலிகள் நரி எண்ணிக்கையைக் குறைக்கின்றன என அறியப்படுகிறது. செந்நாய் கூட்டம் உணவுப் பிரச்சினையில் புலிகளைத் தாக்கிக் கொல்வதாக அறியப்படுகிறது. இருப்பினும் வழக்கமாக பெரிய இழப்புகள் ஏற்படுகிறது. சைபீரியன் புலிகளும் பழுப்புநிறக் கரடிகளும் போட்டியாளர்களாக இருக்கலாம், வழக்கமாக அவை போட்டியைத் தவிர்க்கின்றன; இருந்தாலும் சிலநேரங்களில் புலிகள் கரடிகளின் குட்டிகளையும் சில வயதுவந்த கரடிகளையும் கொல்கின்றன. கரடிகள் (ஆசிய கருப்புக் கரடிகள் மற்றும் பழுப்புநிறக் கரடிகள்) ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் புலிகளின் உணவில் 5-8% பங்காக உள்ளன. தற்பாதுகாப்புக்காகவோ அல்லது இரைச் சண்டையின் காரணமாகவோ பழுப்புநிறக் கரடிகள், புலிகளைக் கொன்றதற்கான பதிவுகளும் உள்ளன. சில கரடிகள் குளிர்கால ஒடுக்கத்திலிருந்து எழும்போது புலிகளின் இரையை அபகரிக்க முயற்சிக்கும். இருப்பினும் புலிகள் சிலநேரங்களில் அதன் தாக்குதலை தடுத்துநிறுத்தும். ஸ்லோத் கரடிகள் மிக முரட்டுத்தனமானவை, சிலநேரங்களில் இளம் வயது புலிகளை அவற்றின் இரை இருக்கும் இடத்தை விட்டுத் தூக்கி எறிகின்றன. இருப்பினும் வங்கப்புலிகளின் உணவு பெரும்பாலும் ஸ்லோத் கரடிகளே.
வாழ்விடம்
பொதுவாக புலியின் வாழ்விடம் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டது: எப்போதும் எளிதில் மறைவிடங்களைக் கொண்டிருக்கும். மேலும் அது நீர்நிலைகள் அருகில் உள்ளதும் இரை நிறைந்த பகுதியாகவும் இருக்கும். வங்கப்புலிகள் அஸ்ஸாம் மற்றும் கிழக்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் உள்ள மழைக்காடுகள், பசுமைமாறாக் காடுகள், பகுதியளவு-பசுமைமாறாக் காடுகள்; கங்கை டெல்டாவின் சதுப்புநிலக் காடுகள்; நேபாளத்தின் இலையுதிர்க் காடுகள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் முட்காடுகள் உட்பட அனைத்து விதமான காடுகளிலும் வாழ்கின்றன. அடர்ந்த தாவரங்கள் நிறைந்த பகுதிகள் புலிகள் மறைந்துகொள்ள ஏற்றதாக இருப்பதால் சிங்கத்துடன் ஒப்பிடும்போது, அவை பெரும்பாலும் அடர்ந்த காட்டுப்பகுதியைத் தேர்வுசெய்கிறது. மேலும் ஒப்பிடுகையில் மதிப்பும் ஆதிக்கமும் குறைவில்லாமல் தனி வேட்டையாடியாக இருக்கக்கூடிய இடத்தையே விரும்புகின்றன. பெரிய பூனையினங்களில் புலியும் ஜாக்குவார் சிறுத்தையும் மட்டுமே நன்கு நீந்துபவை; புலிகள் பெரும்பாலும் குளங்கள், ஏரிகள் மற்றும் ஆறுகளில் அடிக்கடி குளிக்க்கின்றன. மற்ற பூனையினங்கள் போல தண்ணீரை ஒதுக்காமல் புலிகள் அவற்றை விரும்பித் தேடிச்செல்லும். சில நாட்களில் அதிக வெப்பமான நேரங்களில் அவை பெரும்பாலும் குளங்களில் குளித்து சூட்டைத் தணிக்கின்றன. புலிகள் மிகச்சிறப்பாக நீந்துபவை, அவை 4 மைல்கள் வரை நீந்தக்கூடியவை. புலிகள் பெரும்பாலும் இறந்துபோன அவற்றின் இரையை ஏரிகளில் கொண்டு செல்வதும் பொதுவாகக் காணப்படக்கூடிய ஒரு நிகழ்வு.
ஆசியாவின் பாரம்பரிய மருத்துவம்
சீனாவின் பெரும்பாலான மக்கள், புலியின் பல உடற்பகுதிகள் மருத்துவ குணமுள்ளவை எனவும் வலி நிவாரணியாகவும் பாலுணர்வூக்கியாகவும் இருப்பதாக நம்புகின்றனர். இந்த நம்பிக்கைகளை நிரூபிக்கப் போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை. புலிகளின் உடற்பகுதிகளை மருத்துவப் பொருட்களாகப் பயன்படுத்தும் நடவடிக்கைகளை சீனாவில் முன்பே தடை செய்துள்ளனர். புலிகளை சட்ட விரோதமாக வேட்டையாடுவதற்கு மரண தண்டனை வழங்குமளவுக்கு சீன அரசு அளவு மீறிச் சென்றுமுள்ளது. மேலும் உலகில் அருகிவரும் விலங்கினங்கள் மற்றும் தாவரங்களைக் காப்பதற்கான வணிக மரபின் கீழ் புலியின் உடலில் எந்தப் பகுதியையும் வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்துவது சட்ட விரோதமானது. மேலும் சீனாவிலும் 1993 ஆம் ஆண்டில் இருந்து தேசிய அளவிலான இவ்வகைக்கான வணிகத் தடை உள்ளது. இருப்பினும் அங்கு பூனையினங்களை இனப்பெருக்கம் செய்து இலாபம் அடையும் செயலில் ஈடுபட்டுள்ள புலிப் பண்ணைகள் பல உள்ளன. தற்போது இந்தப் பண்ணைகளில் காப்பகங்களிலேயே பிறந்த அரைத் திறனுள்ள 4,000க்கும் 5,000க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான விலங்குகள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
புலியானது வங்காள தேசம், நேபாளம், இந்தியா (வங்கப் புலி), மலேஷியா (மலேசியா), வட கொரியா மற்றும் தென் கொரியா (சைபீரியன் புலி) ஆகிய நாடுகளின் தேசிய விலங்காகத் திகழ்கிறது.


