பருவமானவர்கள்
முன்னுரை
- விவரங்கள்
- படிப்புகள்: 3349
வணக்கம், .
வாழ்க்கை இயந்திரமயமாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் பருவமடைந்த ஆண் பெண் இருபாலரும் அவர்களின் வளர்ச்சி பற்றிய அடிப்படை விடயங்களை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. நம் முன்னோர்களின் காலத்தில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை காரணமாக இவ்விடயங்களை சொல்லித்தர தாத்தா, பாட்டி அல்லது அவர்களின் உந்துதலின் காரணமாக பெற்றோர்களும் இருந்தனர். இன்று அப்பா ,அம்மா,பிள்ளைகள் என்று ஒரே வீட்டில் வசித்தாலும் இவ்விடயங்களைப பற்றிப் பேச யாரும் விரும்புவதில்லை . எனவே இது வயது வந்தவர்களும் , இல்லற வாழ்கையில் ஈடுபட்டிருப்பவர்களும் அவசியமாக அறிந்து கொள்ளக் கூடிய விடயமாக இருப்பதால் எனது வலையில் வெளியிடுகிறேன்.
நன்றி.
முன்னுரை
பருவமானவர்கள் என்ற இந்த நூல் பாலியல் பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்ட அனைத்திற்கும் தீர்வு காணாவிடினும் 'பாலியலுறவு' பற்றிய அடிப்படை உண்மைகளை கல்வியாக ஊட்ட முயற்சிக்கிறது. இது பாலியல் பிரச்சினைகளுக்குள்ளாகும் அனைவருக்கும் குறிப்பாக பெரும்பாலும் சீரழிவுக்குள்ளாக்கப் படுகின்ற இளம்வயதினருக்கு இன்றியமையாததாகும். இளம்வயதினர் தங்களை செழுமைப் படுத்திக்கொள்ள வேண்டிய பலவிடயங்களில் பாலியலும் ஒன்றாகும்.
பாலியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், பாலியல் சீரழிவுகளிலிருந்து சமூகத்தை மீட்டு பாதுகாக்கவும் தொடர்ச்சியாக பலவிதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான ஆரம்ப முயற்சியாக இவ்வெளியீட்டைக் கொள்வோம்.
இந்நூல் 'தமிழ்நாடு அறிவியல் கழகத்திற்காக' (Tamil Nadu Science Forum - TNSF) சென்னை சவுத்விஷன் நிறுவனத்தால் 2000 ஆண்டு ஒக்ரோபரில் Adolscence-to walk you through என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலுக்கான ஆங்கிலச் சுவடியின் (text) ஆசிரியர் கலாநிதி. பெக்கி மோகன் (Paggy Mohan Ph.D) ஆவார். அதனை தமிழில் மொழி பெயர்த்து வழங்கியவர் க. நடனசபாபதி ஆவர்கள்.
விஞ்ஞானமும் அறிவியலும் வியத்தகு வளர்ச்சி பெற்றுவிட்டன. ஒவ்வொரு துறையிலும் நுணுக்கமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்பேறாக உலகின் ஒரு மூலையில் பெற்ற ஆய்வு முடிவுகளை மறு அந்தத்தில் உள்ள கிராமங்களும் மறுகணம் பெறக்கூடியவாறு தகவல் புரட்சி வழிவகுத்துள்ளது. அவற்றைப் பெறுவதற்கு ஆங்கில மொழி அறிவின் போதாமை ஒரு தடைக்கல்லாகப் பலருக்கு இருக்கக் கூடும். அத்துடன் எமது நீண்ட வரலாறு கொண்ட பண்பாட்டுப் பின்னணியானது பருவ மாற்றங்களையும், பாலியல் பிர்ச்சினைகளையும் தமது பிள்ளைகளோடு ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகப் பேசுவதற்குத் தடைக்கல்லாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை.
அதேபோல் பாலியல் கல்வி பாடசாலைக் கல்வித்திட்டத்தில் அடங்கியிருந்த போதும் மேற்கூறிய காரணங்களால் ஆசிரியர்களால் போதிக்கப்படாமல் இருப்பதையும் காண்கிறோம்.
இத்தகைய சூழலில் நடனசபாபதியின் இம்மொழிபெயர்ப்பு முயற்சி எமது சமூகத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். பருவமானவர்கள் பற்றிய மிக அண்மைக்கால விஞ்ஞான ரீதியான சிந்தனைகளை அது எமக்குத் தருகிறது. 2000 ஆண்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மூலப்பிரதியை இவ்வளவு விரைவாக எமக்கு தமிழில் தரும் நடனசபாபதி எமது நன்றிக்குரியவர்.
இந்நூல் எவை பற்றிப் பேசுகிறது? பருவமடைதல் தொடர்பான அனைத்து விடயங்களையும் பேசுகிறது எனலாம்.
பருவமடையும் போது ஆண்களிலும் பெண்களிலும் ஏற்படுகின்ற உடல், உருவ மாற்றங்களையும் வளர்ச்சிப் படிகளையும் தெளிவாக விளக்குகிறது. அவர்களுக்கு அந்நேரத்தில் ஏற்படக்கூடிய சில சில்லறைப் பிரச்சினைகளான முகப்பருக்கள், உடல்மணம், உடல் உரோமங்கள், குரல் மாற்றங்கள், பிறப்புறுப்பின் அளவு, மார்பகங்களின் வளர்ச்சியில் ஏற்படும் வேறுபாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றியும் தெளிவாகச் சொல்கிறது.
இவை தவிர பாலியல் உணர்வுகள், காதல், முத்தம், உடலுறவு ஆகியவை பற்றி வெளிப்படையாகவும் ஆபாசமின்றி எல்லோரும் படிக்கக்கூடிய முறையில் இந்நூல் பேசுகிறது. அவ்வுணர்வுகள் இயற்கையாகவும், பாரம்பரிய ரீதியாகவும் தணிக்கப்படும் முறைகள் பற்றிப் பேசுவதுடன் நின்றுவிடாமல் பருவமானவர்கள் வெளியே பேசக் கூச்சப்படும் முதல் வெளியேற்றம், படுக்கை நனைதல், சுயவெளியேற்றம், தன்னினச் சேர்க்கை போன்ற இளம் சமுதாயத்தினர் அறிய வேண்டிய பல்வேறு விடயங்களை பற்றி ஆணித்தரமான கருத்துக்களை துணிவாகக் கூறுவது வரவேற்கத்தக்கது.
இவை பற்றிய பல கேள்விகளைக் கேட்க எண்ணியும் வெளிப்படையாகப் பேசத் தயங்கும் இளவயதினரை தினமும் வைத்தியசாலைகளில் காண்கிறோம். அவர்கள் உள்ளக் கிடக்கையைப் புரிந்து விளக்க முற்படுகிறோம். இதற்கு மேல் இன்னும் எத்தனை பேர் வெளியுலகில் பேசா மடந்தைகளாகத் தம்முள் மறுகி, கவலையுற்றுச் சோர்ந்து கிடப்பர். அவர்கள் அனைவருக்கும் இந்நூல் வரப்பிரசாதமாகும்.
இவற்றிற்கு மேலாக கருத்தடை முறைகள் பற்றியும், இருபாலாரும் எதிர் கொள்ளும் பாலியல் வல்லுறவுகள் பற்றியும் அவற்றைத் தடுக்கும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறுகிறது. புகைத்தல், மதுபானம், போதைப் பொருட்களுக்கு ஆட்படுவதினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் எடுத்துக் கூறுகிறது.
எயிட்ஸ், ஹேர்பிஸ் அடங்கலான அனைத்து பாலியல் நோய்கள் பற்றியும் கூறுவதோடு அவற்றைத் தடுக்கும் முறைகள் பற்றிய விபரமான தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
எனவே பருவமானவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய நூல் இது.


