ஏற்றப்பாட்டு

ஏற்றப்பாட்டு

மாசி மல கந்தா
மயி லேறும் முருகா
மலப் பழனி வேலா
மங்க மண வாளா

வளரும் பிள்ளையாரே
காரும் பகவானே
ஏத்த முகம் பாரும்
எங்கள நீ காரும்

பிள்ளை யாரைப் பாடி
பிடித்தன் கையில் கோல
ஆனை முகனைப் பாடி
அனைத்தும் இறைச்சனே

விநாயகனைப் பாடி
விட்டு விடப் போறன்
கணபதியைப் பாடி
கரை ஏறப் போறன்

ஒண்ணே ரகு ராமா
ரெண்டே ரகு ராமா
மூணே ரகு ராமா
நாலே ரகு ராமா
அஞ்சே ரகு ராமா

ஏற்றப்பாட்டு

ஏழு மல வாசா
எளய பெருமாளே
எழுதும் மணவாளா
எங்கள நீ காரும்

எழுபதியா லொண்ணு
எழுபதியா ரெண்டு
எழுபதியா மூணு
எழுபதியா நாலு
எழுபதியா லஞ்சி
எழுபதியா லாறு
எழுபதியா லேழு
எழுபதியா லெட்டு

எட நாட்டு இடையா
கடா ஓட்டி வாடா
மல நாட்டு இடையா
மந்த ஓட்டி வாடா

எட நாடு தூரம்
கடா வரா தய்யா
மல நாடு தூரம்
மந்த வரா தய்யா

குட்டியாடு ரொம்ப
கூட வரா தய்யா
மொட்ட ஆடு ரொம்ப
மோடு ஏறா தய்யா


ஏற்றப் பாட்டு



பிள்ளையாரே வாரும்
பெருமாளே வாரும்
சிவனாரே வாரும்
வேலவரே வாரும்

சிவனும் பெருமாளும்
சேர்ந்து ரதமேற
அரியும் சிவனும்
அமர்ந்து மலலேற

குருவும் பெருமாளும்
கூடி ரதமேற
பொற் கொடையும் தேரும்
போக வரவேணும்

ஏற்றப்பாட்டு

அறுவதியா லொண்ணு
அறுவதியா ரெண்டு
அறுவதியா மூணு
அறுவதியா நாலு
அறுவதியா லஞ்சி
அறுவதியா லாறு
அறுவதியா லேழு
அறுவதியா லெட்டு

ஆரணி நடுவ
தாம்பர நடுவ
வேலூரு நடுவ
வெத்தல கிடங்கு

வெள்ள வெத்தலயோ
வேலங் களிப்பாக்கே
சுண்ணாம்பு கடையும்
சோனகத் தெருவும்

போனவன் திரும்ப
போட்டாளே மருந்த
போட்டாளே மருந்த
பொடி மருந்து கள்ளி

கள்ளி மருந்தாலே
கருத்த மறந்தேனே
தாசி மருந்தாலே
தாய மறந்தேனே

வேசி மருந்தாலே
வீட்டை மறந்தேனே
பாயி மருந்தாலே
பாசத்த மறந்தேனே

அண்ணன் தம்பி எல்லாம்
அடுத்தப் பகையானேன்
கூட்டாளி மார்க் கெல்லாம்
கொல்லும் பகையானேன்

மாமன் மைத்துனர்க் கெல்லாம்
மனது பகை யானேன்
சுற்றத் தார்க் கெல்லாம்
உற்ற பகை யானேன்

தாசிகளைக் கண்டா
தல மறஞ்சி வாடா
வேசிகளைக் கண்டா
வழி விலகி வாடா